கிராமப்புறங்களில் பிபிஓ தொடங்கினால் ரூ. 7.5 லட்சம் மானியம்

17/08/2010 13:03


சென்னை: கிராமப்புறங்களில் பிபிஓ தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ 7.5 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிராமப்புற பிபிஓக்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கிராமப்புற பிபிஓ கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்ட அரசு உத்தரவு ...

Rural BPOசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை , கோவை  போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் பி.பி.ஓ. நிறுவனங்களைக் கொண்டு செல்ல வகை செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் பணியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றும். அதாவது, பி.பி.ஓ. நிறுவனங்களைத் தொடங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

பி.பி.ஓ. நிறுவனங்களை உருவாக்க காரணமாக அமையும் தொழில் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்புகளுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசனைகளையும், போதிய உதவிகளையும் தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும்.

கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இரண்டு வகைகளில் நிதி உதவி அளிக்கப்படும். ஒன்று மூலதன நிதியுதவி, மற்றொன்று பயிற்சிக்கான நிதியுதவி. குறைந்தது 100 பேருடன் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பி.பி.ஓ. நிறுவனங்களுக்கு 15 சதவீதம் அதாவது ரூ 3 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். பி.பி.ஓ. அமைப்பதற்கான வன்பொருள்கள் உள்ளிட்ட கருவிகளைப் பெற இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றொன்று, பயிற்சிக்கான மானியமாக அரசு அளிக்கிறது. 100 பேருக்கு 3 மாதங்கள் பயிற்சியும், அதன்பின் 9 மாதங்கள் பணியும் வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.

நபர் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ 1,500 வீதம் 3 மாத பயிற்சி காலத்துக்கான உதவித் தொகை மொத்தம் ரூ 4.5 லட்சம் வழங்கப்படும். பயிற்சியையும், பணியையும் வழங்கிய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தொகை அளிக்கப்படும்.

கிராமப்புற பி.பி.ஓ.க்கள் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களைத் திரட்டுதல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல், தகவல்கள் மேலாண்மை, தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

குரல் வழியிலான பி.பி.ஓ.க்கள், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கும் பணியும், வர்த்தக ஆய்வு, சர்வே, விற்பனை போன்ற பணிகளும் கிராமப்புற பி.பி.ஓ.க்கள் வழியாக செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thatstamil.oneindia.in/news/2010/08/17/tamilnadu-rural-bpo-policy-subsidary.html


Create a website for free Webnode